அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய திட்டமிடும் ஈரான் : இஸ்ரேல் தகவல்!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார்.
டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் டிரம்பை கொல்ல விரும்புகிறது.
ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டோம்.
ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.