டொனால்ட் டிரம்பை கொல்ல ஈரான் ஒருபோதும் சதி செய்யவில்லை ; அதிபர் மசூத் பெஸெஷ்கியான்
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பைக் கொல்ல தாங்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியதில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பும் அமெரிக்க அரசும் அத்தகைய குற்றச்சாட்டைக் கூறிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) என்பிசி நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது திரு பெஸெஷ்கியான் அதனை மறுத்தார்.
டிரம்ப்பைக் கொல்வதற்கான சதித்திட்டத்தில் தொடர்பிருந்ததாகக் கூறி, கடந்த 2024 நவம்பர் மாதம் ஈரானின் புரட்சிக் காவலர் படையைச் சேர்ந்த நபர் ஒருவர்மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சுமத்தியது. தாக்குதல் இடம்பெறுமுன் சட்ட அமலாக்கத்துறை அதனை முறியடித்ததாகவும் கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதும், தம்மைக் கொல்வதற்கான முயற்சிகளின் பின்னணியில் ஈரான் இருக்கக்கூடும் என்று டிரம்ப்பும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அப்படி எதையும் தாங்கள் செய்யவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்த பெஸெஷ்கியான், “தொடக்கத்திலிருந்தே அப்படி அந்த முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை, இனிமேலும் செய்யமாட்டோம்,” என்று உறுதியாகக் கூறினார்.
சென்ற ஆண்டு ஜூலையிலும் செப்டம்பரிலும் தம்மைக் கொல்ல இரு முயற்சிகள் இடம்பெற்றபோதும் அவ்விரண்டிலிருந்தும் தப்பினார் டிரம்ப்.
அவ்விரு முயற்சிகளிலும் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதற்கு எவ்விதச் சான்றும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துவிட்டனர்.
இணையம் வழியாக அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தாங்கள் தலையிட முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஈரான் ஏற்கெனவே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.