பற்றி எரிகிறது ஈரான்! இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?
மத்திய கிழக்கிலுள்ள தமது படைத்தளங்களில் இருந்து சில பணியாளர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரியொவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தமது நாட்டுமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பாதுகாப்பு தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையிலேயே மத்திய கிழக்கிலுள்ள தமது படை தளங்கள் தொடர்பில் அமெரிக்கா கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.
ஈரானில் வரலாறு காணாத வகையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்களை தூண்டிவிட்டு வன்முறையை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏற்படுத்தியுள்ளன என்று ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
போராட்டங்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இதுவரையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஈரானிலுள்ள தமது நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு பிரிட்டன், கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஈரானின் வெடித்துள்ள வன்முறை பிராந்திய பதற்;றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முன்னாயத்த நடவடிக்கையாக முக்கிய பாதுகாப்பு தளங்களில் பணியாளர்களை அமெரிக்கா மீளப்பெறுகின்றது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வானது, ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவூதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட அரபுலகம் விரும்பவில்லை. இதன்காரணமாகவே அமெரிக்கா மௌனம் காத்துவருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.





