ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தியதற்காக இரு MKO உறுப்பினர்களை தூக்கிலிட்ட ஈரான்

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்த இருவருக்கான மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியதாக மிசான் என்ற நீதித்துறை நாளேடு தெரிவித்துள்ளது. அந்த இருவரும் தடைசெய்யப்பட்ட முஜாஹிதீன் – இ – கல்க் (MKO) என்ற குழுவைச் சேர்ந்தவர்கள்.
மெஹ்டி ஹசானி, பெரூஸ் எசானி- எஸ்லம்லூ ஆகிய இருவருக்கும் உச்சநீதிமன்ற ஆதரவுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தப் பயங்கரவாதிகள், எம்இகெ தலைவர்களுடன் ஒருங்கிணைந்து டெஹ்ரானில் ஒரு வீட்டை அமைத்து அதில் ஏவுகணைகளையும் கையெறி குண்டுகளையும் உருவாக்கினர். அவர்கள் குடிமக்கள் உள்பட வீடுகள், சேவை, நிர்வாகக் கட்டடங்கள், கல்வி, அறநிறுவன நிலையங்கள் ஆகியவற்றின்மீது அவற்றைப் பாய்ச்சினர். மேலும் எம்இகெ அமைப்பிற்கு ஆதரவாக அவர்கள் தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர், என்று மிசான் நாளேடு குறிப்பிட்டது.
மரண தண்டனையை எதிர்கொண்ட இருவர்மீதும் இறைவனுக்கு எதிரான போரில் ஈடுபட்டதாகவும் தேசத்தின் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்பு, தகவல் அமைச்சில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து 2022ஆம் ஆண்டு எசானி எஸ்லம்லூ கைது செய்யப்பட்டதாக மேர் செய்தி நிறுவனம் சொன்னது.
ஈரானில் உள்ள மக்கள் முஜாஹிதீன் அமைப்பு என்று அறியப்படும் எம்இகெ, 1970களில் ஷா அரசாங்கத்துக்கு எதிராக குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய சக்திவாய்ந்த இடதுசாரி இஸ்லாமிய அமைப்பு. 1979ஆம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சியின்போது அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது.
2012ஆம் ஆண்டு வரை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்தக் குழுவைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தின.