கடுப்பில் ஐபிஎல் அணிகள்
2025 ஐபிஎல் ஏலத்துக்கான விதிகளை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.
ஆறு வீரர்களை தக்க வைப்பது என்பது ஐபிஎல் அணிகளுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அதில் ஒரு சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது பிசிசிஐ.
ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் மொத்தமாக 79 கோடி ரூபாயை செலவிட வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு அணி ஐந்து சர்வதேச வீரர்களையும், ஒரு உள்ளூர் வீரரையும் தக்க வைக்கிறது என வைத்துக் கொண்டால் தக்க வைக்கப்படும் முதல் வீரருக்கு 18 கோடி சம்பளம் அளிக்க வேண்டும்.
அதே போல தக்க வைக்கப்படும் இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும் சம்பளமாக அளிக்க வேண்டும்.
அடுத்து நான்காவது வீரரை தக்க வைக்க வேண்டும் என நினைத்தால் மீண்டும் 18 கோடி சம்பளமாக அளிக்க வேண்டும்.
ஐந்தாவது வீரருக்கு 14 கோடி அளிக்க வேண்டும். இதன் மூலம் மூன்று வீரர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் வீரர்களை தக்க வைக்க நினைக்கும் அணிகள் கூடுதல் தொகையை செலவிட வேண்டும்.
ஆக மொத்தம் ஐந்து வீரர்களுக்கு மட்டும் 75 கோடி செலவிட வேண்டும். ஒரு அணி குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் வீரரை தக்க வைக்க வேண்டும் என்ற விதியும் இருப்பதால் அந்த ஒரு உள்ளூர் வீரருக்கு அதிகபட்சமாக நான்கு கோடி சம்பளம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆக மொத்தம் ஆறு வீரர்களை தக்க வைப்பதன் மூலம் மட்டுமே ஒரு அணி 79 கோடிகளை செலவிட வேண்டும்.
ஐபிஎல் மெகா ஏலத்துக்கான ஒரு அணியின் ஒட்டு மொத்த செலவுத் தொகையே 120 கோடி மட்டுமே.
அதில் 79 கோடிகளை ஆறு வீரர்களுக்கு மட்டும் செலவிட்டால், மீதமுள்ள வீரர்களை வாங்குவதற்கு 41 கோடி மட்டுமே கையிருப்பில் இருக்கும்.
அதே சமயம், ஒரு அணி ஒரு வீரரை தக்க வைக்கவில்லை என்றால் ஐபிஎல் ஏலத்தில் அதற்கு பதிலாக ரைட் டூ மேட்ச் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வேறு அணி வாங்கிய பின்னரும் தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணி அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைக்கவோ, ரைட் டூ மேட்ச் அதிகாரத்தை பயன்படுத்தி ஏலத்தில் வாங்கவோ முடியும்.
எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், எத்தனை வீரர்களை ரைட் டூ மேட்ச் அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கலாம் என்பதை அந்தந்த அணிகளே அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில் அதிக வீரர்களை தக்க வைக்க வேண்டும் என விரும்பிய அணிகளுக்கு இது அதிர்ச்சிகரமான முடிவாக அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆறு பேரை அந்த அணி தக்க வைக்க வேண்டும் என நினைத்தால் 79 கோடியை செலவிட வேண்டி வரும்.
பின்னர், 41 கோடியை மட்டும் வைத்துக் கொண்டு திறமையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டு வாங்குவது என்பது சிரமமாக இருக்கும்.
எனவே, இந்த முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் பெரும் குழப்பத்தில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.