ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து அழைப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி நடைபெறவிருந்தது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையறையின்றி நிறுத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியிருந்தார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் தொடருமா அல்லது இந்தியாவிலேயே நடைபெறுமா என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளது. அழைப்பு ஏற்கப்படுமா? என்பது குறித்து விரைவில் தெரிய வரலாம்.