IPL Match 31 – தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பட்லர்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ரன்னிலும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்னிலும் அவுட் ஆகினர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரசல் களம் இறங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரேன் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் ரசல் 13 ரன்னிலும், நரேன் 109 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் நிலைக்கவில்லை. அவர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரியான் பராக், பட்லருடன் ஜோடி சேர்ந்து அதிரடியுடன் விளையாடினார். அவர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் பட்லர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், மறுபுறம் துருவ் ஜுரேல் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) அடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரரான ரோவ்மேன் பவல், அதிரடி காட்டினார். குறிப்பாக, சுனில் நரேன் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசிய அவர், அதே ஓவரில் அவுட்டானார்.
எனினும், பட்லர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 18வது ஓவரில் 18 ரன்களை திரட்டிய அவர், 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 19 ரன்களை எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது.
முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த 3 பந்துகளில் ரன் ஏதும் வரவில்லை 5வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டத்தை பட்லர் தித்திப்பாக முடித்துவைத்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ரானா, வருண், நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.