IPL Match 29 – மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.ரஹானே 5 ரன்னிலும், ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புட ஆடிய கேப்டன் கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர், மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார். மிச்சேல் 17 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய டோனி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களுடனும், டோனி 4 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார். சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்தார்.
மறுபுறம் திலக் வர்மா 31 ரன்களுக்கு வெளியேறினார்.இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டும் எடுத்து.
இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 63 பந்துகளில் 103 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.