IPL Match 27 – இமாலய இலக்கை இலகுவாக வென்ற ஐதராபாத்

ஐ.பி.எல். 2025 தொடரின் 27வது போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
ஷ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்து விளாசத் தொடங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும். பஞ்சாப் அணியின் 2வது தோல்வி இதுவாகும்.