ஐபிஎல் 2025 – 3 வீரர்களை விடுவிக்க போகும் CSK
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்திருக்கும். 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாதது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வியின் எதிரொலியால் ரசிகர்களே அணியில் உள்ள ஒரு சில வீரர்களை மாற்ற வேண்டுமெனக் கூறி வைத்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடக்கவிருக்கிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிலவும் என ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன்னரும் ஒரு சில தகவல்கள் வெளியாகி அது வைரலாக பேசப்பட்டும் வந்ததது.
அதிலும் குறிப்பாக மும்பை அணியில் விளையாடி வரும் நட்சத்திர வீரர்களாக ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஹைதராபாத் அணியில் சேரவுள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சென்னை அணியிலும் விளையாடி வரும் நட்சத்திர வீரர்களான தீபக் சஹர், ஷர்துல் தாகூர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய வீரர்களை நடைபெறப் போகும் மெகா ஏலத்தில் சென்னை அணி விடுவிக்க உள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலைச் சென்னை அணி இதுவரை வெளியிடவில்லை. சென்னை அணியில் இந்த 3 வீரர்களும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அதிலும், தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் சென்னை அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகின்றனர். மேலும், ரவீந்திராவும் ஒரு தொடர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினாலும் அவரும் நீங்கா இடத்தை ரசிகர்களிடையே பிடித்துவிட்டார்.
இதனால், இந்த வீரர்களைச் சென்னை அணியிலிருந்து விடுவித்தால் இவர்களுக்கு இணையான வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனால் நடைபெறும் இந்த மெகா ஏலத்தின் எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதே போல சமீபத்தில், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை “அன்கேப்டு” வீரராக சென்னை அணி மெகா ஏலத்தில் எடுக்க போவதாக கூறி வந்தனர். அதற்கு சென்னை அணியின் CEO-ஆன காசி விஸ்வநாதன், “இந்த விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டு வரவுள்ளதாக பேசி வருகிறார்கள் ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தால் அதன் பிறகே இதை பற்றி யோசிப்போம்”, எனவும் அப்போது கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.