ஐபோன் 16 வெளியாவதற்கு முன்பே ஐபோன்17 குறித்து வெளியான தகவல்
அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐபோன் 17 பற்றிய ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஐபோன் 16 போன் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகும் என்ற நிலையில், அதற்கு ஒரு வருடம் கழித்து வெளியாகவிருக்கும் போன் இப்படித்தான் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி ஸ்மார்போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2025 இல் ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன் மாடல் இப்படி இருக்கும் தெரியுமா என்று ஊகங்கள் சொன்னாலும் இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. புதிய ஐபோன் 17 உருவாக்கத்தில், புதிய உயர்நிலையிலான கைபேசி மெல்லியதாக இருக்கலாம் என்றும், வேறு சில முக்கிய மாற்றங்களைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஐபோன் 17 தொடர்பான சமீபத்திய கசிவு, தொழில்நுட்ப நிறுவனம் iPhone 17 Pro Max க்கு மேலே வைக்கப்பட்டுள்ள “ஸ்லிம்” கைபேசி மாடலைக் கொண்டு வரும் என்று சொல்கிறது. ஐபோன் 17 ஆனது 6.65 இன்ச் டிஸ்ப்ளே திரையைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸுக்கு இடையில் இருக்கும் அம்சமாக இருக்கும்.
ஐபோன் 17 விலை என்னவாக இருக்கும் என்ற ஊகத்திற்கு சுமார் $1,299 இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த ஐபோன் ஆக இருக்கும். வேண்டுமானால, ஐபோன் 18… என 2026க்கு பிறகு வரும் ஐபோன்களின் விலை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.
ஐபோன் 17இல், மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக LTPO சேர்க்கப்படும். இந்த மேம்படுத்தல் அனைத்து மாடல்களுக்கும் ProMotion தொழில்நுட்பத்தை இயக்க உதவும், மேலும் 120Hz வரை சரிசெய்யக்கூடிய புதுப்பிப்பு வீதத்துடன் மென்மையான காட்சிகளை வழங்கும்.
இந்த தொழில்நுட்பம் ப்ரோ சாதனங்களில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது என்றாலும், இப்போது ProMotion தொழில்நுட்பம் வழக்கமான iPhone 17 வரிசைக்கு ஒரு பெரிய புதுப்பிக்காக இருக்கலாம். ஐபோன் 17 ப்ரோ கைபேசிகளில் 12ஜிபி மெமரி ஸ்டோரேஜ், 48 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் மேம்பட்ட ஏ19 ப்ரோ சிப்செட் உடன் வலுவான டிரிபிள் லென்ஸ் கேமரா அமைப்பு இருக்கலாம்.
ஐபோன் 17 ஒரு தனித்துவமான A19 செயலியுடன் இணைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், அதன் கேமரா மற்றும் பிற அம்சங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் சரியாக தெரியவில்லை. “ஸ்லிம்” கைபேசி மாடலில் டூயல்-லென்ஸ் ஷூட்டர் மற்றும் அலுமினியம் பிரேம் இடம்பெறலாம்.
இந்த கசிவுகள் ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 கவர்ச்சியாக இருக்கலாம் என்று சொன்னாலும், இந்த போன் அறிமுகமாக இன்னும் ஓராண்டுகளுக்கு மேல் இருப்பதாலும், இதற்கு முந்தைய வரிசையே இன்னும் சில வாரங்களுக்கு பிறகு தான் சந்தைக்கு வரும் என்பதாலும் இவற்றில் பல மாறுதல்கள் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். செப்டம்பர் 2025 இல் ஆப்பிள் நிறுவனம் iPhone 17 ஐபோனை அறிமுகப்படுத்தக்கூடும்.