நாமலின் சட்டத் தகைமை பற்றிய விசாரணை ஆரம்பம்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விசேட ஏசி அறையில், இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் தனது சட்டத்தரணி பரீட்சை எழுதினார் என்றும், டிசெம்பர் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அறிக்கை வெளியிட முடியும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார என்பவர், இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சாட்சி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்த ஜமுனி கமந்த துஷார, முறைப்பாடு நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ஷவின் சட்ட அந்தஸ்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, சட்டப் பரீட்சைக்கு தோற்றிய விதம் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, பரீட்சைக்காக ஏசிஅறையில் தனிமையில் தோன்றியதாக கூறுவது சட்டக்கல்லூரிக்கு அவமரியாதை எனத் தெரிவித்தார்.
அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால், குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், நாமல் எம்.பி மேலும் தெரிவித்திருந்தார்.