LinkedIn தளத்திலும் Shorts வீடியோ அறிமுகம்…
சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஷார்ட்ஸ் வீடியோ அம்சம் LinkedIn தளத்திலும் கொண்டுவரப்படும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போலவே LinkedIn தளத்திலும் பயனர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் இது பெரும்பாலும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவலைப் பெறுவதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Microsoft நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளத்தில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பயனர்களை ஈர்ப்பதற்கு பல புதிய அம்சங்களை LinkedIn அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் LinkedIn தளத்தில் கேம்கள் அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்பட்டது. அதற்கான சோதனையை அந்நிறுவனம் செய்து வருவதாகவும், பயனர்கள் விளையாடக்கூடிய சில எளிய கேம்களை தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பிரபல சமூக வலைதளங்களான யூடியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் பிரபலமாக இருக்கும் ஷார்ட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை LinkedIn தளத்திலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் எல்லா சமூக வலைதளங்களிலும் ரீல்ஸ் வீடியோக்களே ட்ரெண்டிங்கில் உள்ளன. இதைப் பார்ப்பதற்காகவே பலர் இத்தகைய சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். எனவே தன் பயனர்களை ஈர்ப்பதற்காக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த LinkedIn திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
பயனர்கள் எதிர்பார்க்கும் வீடியோக்களை அவர்கள் எளிதாக கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தற்போது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அனைவராலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே இந்த அம்சம் முழுமை பெற்று மற்ற சமூக வலைத்தளங்கள் போலவே LinkedIn தளமுப் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.