மலேசியாவின் கோலாலம்பூரில் இடைவிடாத கனமழை,திடீர் வெள்ளம் – ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்

கனமழை காரணமாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பல பகுதிகளில் அக்டோபர் 15ஆம் திகதியன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
காலை 8.30 மணி அளவில் வழக்கத்துக்கு மாறாக கனமழை தொடர்ந்து பெய்ததில் கோலாலம்பூரில் உள்ள பல ஆறுகள் நிரம்பி வழிந்தன. இதன் விளைவாக சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவை கடுமையாகப் பாதிப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.
வெள்ளம் காரணமாக நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் போக முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவித்தனர்.இதனால் நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.வானிலை காரணமாக மலேசிய நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று மலேசியப் பொதுப் பணித் துணை அமைச்சர் அகமது மாஸ்லான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மாட்டிக்கொண்டு தவித்ததாக அவர் கூறினார்.
கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கோலாலம்பூருடன் சேர்த்து சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, பாகாங், பேராக், கெடா, நெகிரி செம்பிலான், திரங்கானு, சரவாக், சாபா ஆகிய மாநிலங்களில் மாலை 5 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் மேலும் பல இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பிற்பகல் நேரத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் அதன் விளைவாகப் பலத்த காற்று வீசுவதுடன் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியது.
இடைவிடாக் கனமழை காரணமாக கோலாலம்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள தாமான் மெலாவாத்தியில் உள்ள சில வீடுகளுக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நீர் மட்டம் முழங்கால் அளவுக்கு உயர்ந்ததால் அப்பகுதிக்கு அருகில் உள்ள பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் உள்ள சில இடங்களில் வீடுகளின் கூரை வரை நீர் மட்டம் உயர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.