மலைய மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் – தினேஷ் குணவர்த்தன!
மலையக திராவிட மக்களுக்கான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையின் மலையக பகுதிக்கு வருகை தந்து 200 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு, புதிய சமூக இலச்சினையை வெளியிடும் நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல தசாப்தங்களுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற்சங்கம் அமைக்க முயன்றபோது, இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன, கொல்வின் ஆர். டி சில்வா, எட்மண்ட் சமரக்கொடி போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஐரோப்பிய தோட்ட உரிமையாளர்களால் விரட்டியடிக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள் பல வருடங்களாக தொழிலாளர்களுக்கான பல உரிமைகளை வென்றெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் போன்ற புதிய தலைமுறை தலைவர்கள் மலையக சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.