திருகோணமலை நிலத்தடி கடற்படை சித்திரவதை முகாம் தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை நிலத்தடி கடற்படை சித்திரவதை முகாமில் 40 முதல் 60 வரையிலான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தை முன்னாள் கடற்படைத் தலைவர் ஒருவர் அறிந்திருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
ஜூலை 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஜூலை 30 வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவை பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், உலுகேதென்ன இந்த விடயத்தை வெளிப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிலத்தடியில் இருந்த இரகசிய சித்திரவதைக் கூடம் குறித்து அவரைத் தவிர, வேறு இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகளும் அறிந்திருந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததிலிருந்து அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
2010 ஒக்டோபர் முதலாம் திகதி புலனாய்வுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய கன்சைட் முகாமை பார்வையிட சென்றதாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழ் பத்திரிகையொன்றின் வார இறுதி பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
40-60 பேர் வரை அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உலுகேதென்ன குற்றப் புலனாய்வு விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் இரண்டு வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலையில் உள்ள நிலத்தடி முகாம் தனது கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், விசேட புலனாய்வுப் பிரிவு என அழைக்கப்படும் ஒரு பிரிவு அங்கு இயங்கியதாகவும், அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் இயக்கப்படும் ஒரு பிரிவு அல்ல எனவும் உலுகேதென்ன கூறியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படை புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடாத அப்போதைய கமாண்டர் டி.கே.பி. தசநாயக்கவால் இந்த புலனாய்வுப் பிரிவு வழிநடத்தப்பட்டதாகவும், ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய ஆறு கடற்படை வீரர்கள் அந்த குழுவில் இயங்கியதாகவும் தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த விசேட புலனாய்வுப் பிரிவை தான் கலைத்துவிட்டதாக உலுகேதென்ன குற்றப் புலனாய்வு பிரிவிடம் தெரிவித்ததாக, திணைக்களத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த ஒருவரை காணாமல் ஆக்கிய வழக்கில், இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன, ஜூலை 28ஆம் திகதி குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 22, 2010 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் காணாமல் போன கனேரலாலகே சாந்த சமரவீரவை வைத்திருந்ததாக நம்பப்படும் கடற்படை சித்திரவதைக் கூடம், அப்போதைய கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் இயங்கியது.
காணாமல்போன சாந்த சமரவீர கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமான கன்சைட் நிலக்கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயல்திட்டம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.
100 பக்கங்களுக்கும் மேலான இந்த அறிக்கை, “முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை” என தலைப்பிடப்பட்டுள்ளதோடு, கொழும்பிலும் அதைச் சுற்றியும் கடத்தப்பட்டு பின்னர் கன்சைட் முகாமில் இருந்து காணாமல்போன 11 பேர் தொடர்பான, பொலிஸ் விசாரணை குறிப்புகள், நீதிமன்ற பதிவுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆராய்ந்து தொகுக்கப்பட்டதாகும்.
சாந்த சமரவீர தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக, கன்சைட் முகாமில் சுமார் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வு அதிகாரியான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த், 2008-09 ஆம் ஆண்டு 11 பேர் கடத்தப்பட்டமை குறித்த விசாரணைகளை முன்னெடுத்த குற்றவியல் விசாரணை பிரிவிடம் தெரிவித்திருந்தார். இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாராச்சியும் அவருடன் இருந்ததாக பொலிஸார் மேலும் வெளிப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய முன்னாள் கடற்படைத் தளபதி உலுகேதென்ன ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருகோணமலையில் உள்ள கன்சைட் சித்திரவதை முகாமில் நடந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அறிந்திருந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மற்றும் அப்போதைய கிழக்குத் தளபதியும் பின்னர் கடற்படைத் தளபதியுமான ஜெயநாத் கொலம்பகே ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30, 2025 அன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளது.