கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்

கட்டுநாயக்க – ஹீனடியன – இஹல மெண்டிய பகுதியில் இன்று உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உந்துருளியில் வந்த இருவர் இன்று காலை 6 மணியளவில், குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து, அவரின் படுக்கையறைக்கு நேரடியாகச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
காயமடைந்தவர் 29 வயதுடைய காலிங்க உதார சதுரங்க எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்த இளைஞர், அவரது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
காயமடைந்தவர், இதற்கு முன்னர் தனிநபர்களுக்கு வட்டிக்குக் கடன் வழங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
துப்பாக்கிதாரிகள் மினுவாங்கொடை பகுதிக்குத் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.