ஆப்கானிஸ்தானின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்!
ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய பிறகு தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக 1600இற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 2023 உடன் முடிவடைந்த 19 மாதங்களில் 18 பேர் சிறைகளிலும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் காவலிலும் இறந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
“ஒப்புதல்கள் அல்லது பிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில், கைதிகள் கடுமையான வலி மற்றும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும். உடல் ரீதியான அடிகள், மின்சார அதிர்ச்சிகள், மூச்சுத் திணறல், மன அழுத்த நிலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக தண்ணீரை உட்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருப்பது, ஒரு வழக்கறிஞரை அணுக முடியாமல் இருப்பது மற்றும் காவலில் போதிய மருத்துவ பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட பிற மனித உரிமை மீறல்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறல்களில் பத்தில் ஒன்று பெண்களுக்கு எதிரானது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.