இத்தோனேஷிய அதிபர் ஜோக்கோவியின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவல்; வரித்துறையினர் விசாரணை
இணைய ஊடுருவல் மூலம் இந்தோனேஷியாவில் வரிசெலுத்துபவர்களில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பேரின் அடையாள எண்கள் தொடர்பான விவரங்களை யாரோ சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இந்தோனேஷிய அதிபர் ஜோக்கா விடோடோவும் அவரது இரண்டு மகன்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அந்நாட்டில் வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் இணைய ஊடுருவல் மூலம் இந்தோனேஷிய நிறுவனங்கள், இந்தோனேஷிய அரசாங்க அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தனிநபர் தரவுகளை இந்தோனேஷிய அரசாங்கம் போதுமான அளவில் பாதுகாப்பதில்லை என்றும் இதன் காரணமாக இத்தகைய இணைய ஊடுருவல்கள் மூலம் தனிப்பட்ட தரவுகள் பறிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இணைய ஊடுருவல் மூலம் பெறப்பட்ட தேசிய அடையாள அட்டை எண்கள், வரிசெலுத்துவோருக்கான அடையாள எண்கள் ஆகியவற்றைக் கொண்ட பட்டியல் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.அதில் அதிபர், சில அமைச்சர்களின் தனிப்பட்ட தரவுகளும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.