புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 100 பயிற்சி மையங்களை அமைக்க இந்தோனேசியா திட்டம்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.அத்தகைய ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிய மேலும் ஆயத்தமாக இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம்.
“அதிபர் 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். அவற்றுக்கான மேம்பாட்டுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பார்,” என்று புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் காடிர் கார்டிங் கூறினார்.
அந்த நிலையங்கள் கட்டங்கட்டமாக நிறுவப்படும் என்றும் முதற்கட்டத்தில் 30 நிலையங்களை நிறுவ திட்டம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வேலைப் பயிற்சிக் கழகங்களை நிறுவுவதில் தனியார் துறையையும் ஈடுபடுத்த அமைச்சு எதிர்பார்க்கிறது. அந்தக் கழகங்கள் மனிதவள அமைச்சு நிர்வகிக்கும் வேலைப் பயிற்சி நிலையங்களுக்கு இணையாகச் செயல்படும்.
வெளிநாடுகளில் வேலை தேடுவோர் இடையே தகுந்த திறன்களை வளர்ப்பதே அந்த வேலைப் பயிற்சிக் கழகங்களின் நோக்கம்.“நாங்கள் பல்வேறு தரப்புகளுடன் கூட்டாகச் செயல்படுவோம்,” என்று கார்டிங் கூறினார்.
அவற்றில் தொடக்கநிலை, உயர்நிலைக் கல்வி அமைச்சு, உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சு ஆகியவையும் அடங்கும். இந்தக் கூட்டு முயற்சி மூலம், தொழில்சார் உயர்கல்வி நிலையங்கள், தாதிமைப் பள்ளிகள், மற்ற நிபுணத்துவக் கழகங்கள் ஆகியவை அனைத்துலகச் சந்தைகளில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்களின் பயிற்சித் திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும் என்றார் திரு கார்டிங்.
“புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை வலுப்படுத்துவதால், மேலும் அதிகமான திறன்வாய்ந்த ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கார்டிங் கூறினார்.