நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்காக கூகல் நிறுவனத்திற்கு 16.7 மில்லியன் அபராதம் விதித்துள்ள இந்தோனீசியா
நியாயமற்ற தொழில் நடைமுறைகளுக்காக கூகல் நிறுவனத்திற்கு இந்தோனீசியா மோசடித் தடுப்பு முகவை $16.7 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த செயலி மேம்பாட்டாளர்கள் ‘கூகல் பிளே பில்லிங்’ முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், மற்ற கட்டண முறைகளைக் காட்டிலும் கூகல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகச் சந்தேகப்பட்டு, இந்தோனீசியா கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது.
இல்லாவிடில், கூகல் பிளே ஸ்டோர் செயலியகத்திலிருந்து தங்களின் செயலி நீக்கப்படும் நிலையை அவர்கள் எதிர்நோக்கியதாகவும் கூறப்பட்டது.இதனால், பயனர்களின் எண்ணிக்கை குறைந்து, செயலி மேம்பாட்டாளர்களின் வருமானம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முற்றுரிமைக்கு எதிரான இந்தோனீசியச் சட்டத்தை கூகல் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கூகல் பிளே பில்லிங் முறையின்கீழ் கூகல் நிறுவனம் 30% வரை கட்டணம் வசூலித்ததாக விசாரணைக் குழு தெரிவித்தது.
மொத்தம் 280 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனீசியாவில் கூகல் 93% சந்தையைத் தன்வசம் வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அபராதத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக புதன்கிழமையன்று (ஜனவரி 22) கூகல் பேச்சாளர் கூறினார்.