கடுமையான குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தில் 13 தைவானியர்களை நாடு கடத்திய இந்தோனேஷியா
கடுமையான குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படும் 13 தைவானிய நாட்டவர்கள் இந்தோனீசியாவிலிருந்து தைவானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.தைவானில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 5ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இந்தோனீசிய குடிநுழைவுத் துறை இதனை தெரிவித்தது.இணையக் குற்றங்கள், கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றுவது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் 13 தைவானியர்களும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
“குடியேற்ற அதிகாரிகளின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு பதின்மூன்று வெளிநாட்டினரும் தைவானில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. தைவானில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் சில்மி கரிம் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் தைவான் பாஸ்போர்ட் வைத்திருந்த 103 பேரை குடிநுழைவுத் துறை கைது செய்தது. இது, 2024ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின் ஆகப் பெரிய கைது நடவடிக்கையாகும். பாலிக்கு வெளியே அவர்கள் இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் தனது நாட்டைச் சேர்ந்த 14 பேர் மட்டுமே பிரச்சினையில் சிக்கியிருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்படும் தைவானியர்களுக்கு தைவானிய அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று இந்தோனீசிய குடிநுழைவுத் துறை மேலும் தெரிவித்தது.ஆனால் ஜகார்த்தாவில் உள்ள தைப்பே பொருளியல், வர்த்தக அலுவலகம் உடனடியாக இச்சம்பவம் குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.