பிள்ளைகளுக்கு சமூக ஊடகத் தடை தொடர்பில் ஆலோசனை நடத்தும் இந்தோனீசியா
இந்தோனீசியா, 16 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியா அது போன்ற தடை ஒன்றை விதிக்க முடிவெடுத்தது. அதேபோல் இந்தோனீசியாவும் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தகைய தடையை விதிப்பது அவசியமா என்பதை இந்தோனீசிய அரசாங்கம் ஆராயும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் மனநலப் பிரிவு இயக்குநர் இம்ரான் பம்பூடி கூறினார். அத்தடை உடனடியாகச் செயல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடையை விதிப்பதென்றால் குறைந்தது மூவாண்டுகள் ஆகும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) நடந்த பேச்சுவார்த்தையின்போது அவர் சொன்னார். Katadata.co.id ஊடகம் அதைத் தெரிவித்தது. தற்போதைக்கு பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்றும் அவர் சுட்டினார்.
இந்தோனீசியாவின் பதின்ம வயதினரில் 34.9 சதவீதமானவர்கள் ஒரு மனநலப் பிரச்சினையாவது எதிர்நோக்கினர் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்தது. அந்த விகிதம் 15.5 மில்லியன் மக்களுக்கு சமமாகும்.
பிள்ளைகளுக்கான இந்தோனீசியாவின் தேசிய மனநலக் கருத்தாய்வு (I-NAMHS) நடத்தப்படுவதற்கு முந்திய 12 மாத காலத்துக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் பொருந்தும்.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் பெரும்பாலோர் மனப்பதற்றத்தால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது. அதோடு, மனநலப் பிரச்சினைகள் உள்ள 2.6 சதவீத பதின்ம வயதினர் மட்டுமே கருத்தாய்வுக்கு முந்திய 12 மாதங்களில் மனநல ஆலோசனை அல்லது ஆதரவு குழுக்களின் உதவியை நாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.அவர்களில் 38.2 சதவீத்த்தினர் மட்டுமே பள்ளிகளிடமிருந்து ஆதரவு பெற்றனர்.
இன்றைய பிள்ளைகள், முன்னைய தலைமுறைப் பிள்ளைகளைவிட அதிகமான சவால்களை எதிர்நோக்குவதாக I-NAMHS இணைந்து கருத்தாய்வை நடத்திய அமைப்புகளில் ஒன்றான காட்ஜா மடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதாரத் துறை பேராசிரியர் சிஸ்வாந்தோ அகுஸ் விலோப்போ குறிப்பிட்டார். மின்னிலக்க சாதனங்கள், இணையம், இணையத்தில் இடம்பெறும் தொந்தரவு (cyberbullying), சமூக ஊடகங்களில் இடம்பெறும் எதிர்மறைப் பதிவுகள் ஆகியவற்றால்தான் பிள்ளைகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டினார்.