கிழக்கில் இந்தியாவின் 33 அபிவிருத்தி திட்டங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவின் பல்துறைசார் நன்கொடையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 33 கருத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு, ” இந்தியாவின் பல்துறைசார் அனுசரணையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று 2025.04.05 அன்று கையொப்பமிடப்பட்டது.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற 33 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2,371.83 மில்லியன் இலங்கை ரூபா நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்தது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய, அமுல்படுத்துவதற்குள்ள ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் இந்திய தூதுரகம் மற்றும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கும் இடையில் வேறுவேறாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடப்பட வேண்டியுள்ளளது.
அதற்கிணங்க, இந்தியாவின் பல்துறைசார் நன்கொடையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 33 கருத்திட்டங்களுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இந்திய தூதுவர் மற்றும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கையொப்பமிடுவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





