2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஜோடி110 ரன்கள் குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 53 ரன்னில் அவுட்டானார். பிரதிகா ராவல் 76 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் சிறப்பாக ஆடி முதல் சதத்தை பதிவு செய்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஹர்லீன் தியோல் 115 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46.2 ஓவரில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, பிரதிகா ராவல், டிடாஸ் சாது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.