வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்ணிடம் 160 மில்லியன் ரூபாய் மோசடி – வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மேலாளர் தனது கணக்கில் இருந்து 160 மில்லியன் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக இந்தியப் பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்வேதா ஷர்மா நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யப்படும் என நம்பி தனது அமெரிக்க கணக்கிலிருந்து ஐசிஐசிஐ வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளார்
ஆனால் ஒரு வங்கி அதிகாரி தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க “போலி கணக்குகளை உருவாக்கி, தனது கையெழுத்தை போலியாக உருவாக்கி, டெபிட் அட்டை மற்றும் காசோலை புத்தகங்களை தனது பெயரில் எடுத்தார் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“அவர் எனக்கு போலியான அறிக்கைகளை வழங்கினார், என் பெயரில் ஒரு போலி மின்னஞ்சல் கணக்கை உருவாக்கினார் மற்றும் எனது கையடக்க தொலைபேசி எண்ணை வங்கி பதிவுகளில் கையாண்டார், அதனால் நான் பணம் எடுப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் வராது” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் வங்கியின் செய்தித் தொடர்பாளர் “உண்மையில் மோசடி நடந்துள்ளது” என்று ஒப்புக்கொண்டார், ஆனால் ஐசிஐசிஐ “மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான ரூபாய்களை வைப்புத்தொகையாக வைத்திருக்கும் புகழ்பெற்ற வங்கி” என்று கூறினார்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஹொங்கொங்கில் பல தசாப்தங்களாக வாழ்ந்துவிட்டு 2016 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ஷர்மாவும் அவரது கணவரும் நண்பர் ஒருவர் மூலம் வங்கியாளரை சந்தித்தனர்.
அமெரிக்காவில் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், அவர் தனது பணத்தை இந்தியாவிற்கு மாற்றுமாறு ஷர்மாவுக்கு அறிவுறுத்தினார், அங்கு நிலையான வைப்புகளுக்கு 5.5% முதல் 6% வரை வட்டி வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.
ஸ்வேதா பெயரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கணக்கு ஒன்றை அந்த வங்கி மேலாளர், டெல்லியின் பழைய குருக்ராம் பகுதியில் உள்ள தான் வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கியில் தொடங்க உதவி செய்தார். 2019 செப்டம்பர் மாதத்திலிருந்து 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஸ்வேதா இந்த புதிய கணக்கிற்கு அமெரிக்காவிலிருந்து தனது சேமிப்புகளை மாற்றினார்.
இந்த நிதி பரிமாற்றங்கள் அனைத்திற்கும் மேலாளர் வங்கி ரசீதுகள் வழங்கி மின்னஞ்சல்களையும் அனுப்பி வந்தார். இவை தவிர முறையாக உறையிட்ட கோப்புகளையும் அனுப்பி வந்தார். 2024 ஜனவரி மாதம் புது மேலாளர் அந்த வங்கியில் பதவியேற்றார். அவருடன் புதிய வங்கி சேமிப்பு திட்டங்கள் குறித்து பேசும் போது ஸ்வேதாவின் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்வேதா இழந்துள்ள தொகை அசல் மட்டும் 15,74,92,140.00 ரூபாய($1.9 மில்லியன்) என தெரிய வந்துள்ளது. இதற்கான வட்டியுடன் கணக்கிட்டால் இது மேலும் பல லட்சங்கள் அதிகரிக்கும். ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் (autoimmune disorder) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வேதா, இந்த மோசடியினால் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் வங்கி நடத்திய ஆய்வில் மோசடி நடந்திருப்பது உண்மை என்றும், ஸ்வேதாவிற்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என்றும் அவரது பணம் மொத்தமும் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நான் செய்யாத தவறுக்கு பழி வாங்கப்பட்டதாக உணர்கிறேன். என் வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. எனக்கு உறக்கமே வரவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார் ஸ்வேதா.
அந்த வங்கி மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு துறை மற்றும் வங்கி இணைந்து வழக்கை விசாரித்து வருகிறது.