2% பணியாளர்களைக் குறைக்க உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமான TCS

இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (TCS) தனது ஊழியரணியில் 2%, அதாவது கிட்டத்தட்ட 12,000 வேலைகளைக் குறைக்க முடிவுசெய்துள்ளது.இதனால், இடைநிலை, உயர் பொறுப்புகளில் இருப்போரே அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் கட்டம் கட்டமாக ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறும் என்றும் TCS தெரிவித்துள்ளது.
TCS நிறுவனம் உலகம் முழுவதும் 613,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது.இந்தியாவைப் பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு வழங்குவதிலும் வருவாய் ஈட்டுவதிலும் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னணியில் இருந்துவருகிறது. அதன் மதிப்பு 283 பில்லியன் அமெரிக்க டாலர் (S$362.5 பில்லியன்) எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குறைந்த தேவை, நீடித்த பணவீக்கம், அமெரிக்க வணிகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகவும் தேவைப்படாத தொழில்நுட்பத்திற்குச் செலவுசெய்வதை நிறுத்திவைத்துள்ளன.
அதனால், புதிய சந்தைகளுக்குள் நுழைவதாலும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை அதிகப்படுத்த உள்ளதாலும் எதிர்காலத்திற்குத் தயாரான நிறுவனமாக மாறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றும் அதனையொட்டியே ஆட்குறைப்பு இடம்பெறவுள்ளது என்றும் TCS விளக்கமளித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நிறுவனச் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் TCS நிறுவனம் எதிர்பார்ப்பைவிட குறைவாகவே வருவாய் ஈட்டியது என்று அதன் தலைமை நிர்வாகி கே.கீர்த்திவாசன் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் 20% கூடுதலாக உற்பத்தித்திறனை எட்ட முடிகிறது என்பதால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறவில்லை. சில வேலைகளுக்குப் பொருத்தமான திறன்கள் இல்லாததால் அல்லது சிலரைப் பணியமர்த்த முடியாததால் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது,” என்றும் அவர் விளக்கமளித்தார்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தாலேயே தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று ‘எச்எஃப்எஸ் ரிசர்ச்’ எனும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபில் ஃபெர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.