இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அழைப்பு விடுத்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்தித்த போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 அன்று ஜனாதிபதி திஸாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான முதல் பயணத்தை இந்த விஜயம் குறிக்கிறது.
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதும் இலங்கையுடனான தனது நீண்டகால பங்காளித்துவத்தை ஆழப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துவதும் இந்திய அமைச்சரின் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஜனாதிபதி திஸாநாயக்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.