இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டு கொலை ; சக ஊழியர் கைது

டெக்சசில் 50 வயது நபர் ஒருவர் அவரின் மனைவி, மகன் கண்முன் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் சாலையோர ஹோட்டலொன்றில் மேலாளராக வேலை செய்தார். துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அவர் ஊழியரிடம் கூறியதால் சர்ச்சை மூண்டது.
டாலஸ் நகரில் உள்ள டௌன்டவுன் ஸ்வீட்ஸ் ஹோட்டலில் கொடூரச் சம்பவம் புதன்கிழமை (செப்டம்பர் 10) காலை நடந்தது. நகரக் காவல்துறை அந்தத் தகவலைத் தெரிவித்தது.
கர்நாடகத்திலிருந்து புலம்பெயர்ந்தவரான சந்திரமௌலி நாகமல்லையா, தமது உத்தரவை 37 வயது கோபோஸ் மார்ட்டினெசிடம் மொழிபெயர்த்துக் கூறுமாறு இன்னோர் ஊழியரைக் கேட்டுக்கொண்டார்.அதனால் சினமடைந்த கோபோஸ் மார்ட்டினெஸ், பெரிய கத்தியால் நாகமல்லையாவைத் தாக்கியது கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவாகியுள்ளது. அலுவலகத்திற்கு ஓடியபோதும் விடாமல் துரத்திய கோபோஸ் மார்ட்டினெஸ் அவரைச் சரமாரியாகத் தாக்கினார்.
அலுவலகத்தில் இருந்த நாகமல்லையாவின் மனைவி, மகன் முன்னிலையில் தாக்குதல் சம்பவம் நடந்தது. தலையிட்டுத் தடுக்க முயன்றபோதும் சந்தேக நபரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோபோஸ் மார்ட்டினெஸ் ஏற்கெனவே பல முறை குற்றங்களைப் புரிந்து சிறை சென்றவர். கைதுசெய்யப்பட்ட அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோபோஸ் மார்ட்டினெசுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடும். கொலை செய்ததை விசாரணையின்போது சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை கூறியது.
ஹியூஸ்டனில் உள்ள இந்தியத் தூதரகம், நாகமல்லையா படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.
“குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறோம். டாலஸ் காவல்துறையினர் வசம் சந்தேக நபர் இருக்கிறார். விவகாரத்தை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம்,” என்று இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.