சிங்கப்பூரின் அதிபரானார் தமிழரான தர்மன் சண்முகரத்னம்!
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் மற்றும் இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.
அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் திகதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரும் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.