அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் பட்டாச்சார்யாவுக்கு வாய்ப்பு
அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குநராக கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார குழுவில் இருந்த நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கொல்கத்தாவில் கடந்த 1968ம் ஆண்டு பிறந்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருந்து கொள்கை பேராசிரியராகவும், பொருளாதார நிபுணராகவும் உள்ளார். அமெரிக்க அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரச்சார குழுவில் இணைந்தார்.
இவர் அமெரிக்காவின் தேசிய சுகாதார மையங்களின் (என்ஐஎச்) அடுத்த இயக்குநராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அமைப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உயிரி மருத்துவ ஆராய்ச்சியை மேற்பார்வையிட்டு வருகிறது.
அமெரிக்க சுகாதாரத்துறை தலைவராக ராபர்ட் எப். ஜூனியர் கென்னடியை டிரம்ப் சமீபத்தில் நியமித்தார். அவரை டாக்டர் ஜே பட்டாச்சார்யா சமீபத்தில் சந்தித்து பேசினார். அமெரிக்க சுகாதார மையங்களை மாற்றியமைக்க பட்டாச்சார்யா கூறிய கருத்துக்கள், ராபர்ட் எப் ஜூனியர் கென்னடியை மிகவும் கவர்ந்தது. புதுமையான ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும், நீண்ட காலம் பணியில் இருக்கும் அதிகாரிகளின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என பட்டாச்சார்யா பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் இவர் அமெரிக்க சுகாதார மையங்களின் இயக்குநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப் அறிவிப்புக்கு பின்பே இந்த முடிவு இறுதி செய்யப்படும்.