ஏமனில் கொலைக்காக இந்திய செவிலியருக்கு மரண தண்டனை
ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே கேரள செவிலியரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்படி உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டிற்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகக் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர் சென்றார்.
கடந்த 2017ம் ஆண்டில் அவர் ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இருப்பினும், கடந்தாண்டு நவம்பர் மாதமே மேல்முறையீட்டு மனுவையும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபரிடம் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
இந்தச் சூழலில் தான் தற்போது சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி உறுதி செய்துள்ளார்.
அவருக்கு அடுத்த ஒரு மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையே செவிலியர் பிரியாவை இந்தியா அழைத்து வர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.