கேல் ரத்னா விருது பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்
2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர் மற்றும் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (பஞ்சாப்), சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதில் 18 வயதாகும் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்திசாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். அப்போது குகேஷ் மற்றும் மனுபாகருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.