கோலிக்கும் காயமா? இந்தியாவுக்கு பின்னடைவு?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பெர்த்தில் உள்ள வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதலில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து இந்திய வீரர்கள், தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிந்து பயிற்சிப் போட்டியில் ஆடி வருகின்றனர்.
ராகுல் காயம்
இந்நிலையில், இன்று காலை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீரர் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார். கேப்டன் ரோகித் சர்மா பெர்த்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் களமாட மாட்டார் என்று கூறப்படும் நிலையில், அவரது இடத்தில் ராகுல் களமிறங்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார். இருப்பினும், அவரது காயம் குறித்த விரிவான தகவல்கள் பகிரப்படவில்லை.
கோலிக்கு காயம்?
இந்த நிலையில், கே.எல் ராகுலைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கும் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, கோலிக்கு ஏற்பட்ட மர்ம காயத்திற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கோலியின் காயத்தின் தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி நேரடியாக அறிந்தவர்கள் கோலி தனது மர்ம காயத்திற்கு ஸ்கேன் செய்ததாகக் கூறியுள்ளனர்.
மர்ம காயத்திற்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டாலும், கோலி இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். ஆனால், அவரால் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் செகண்ட் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியாவில் கோலியின் சாதனை
கோலி, 2011-12ல் முதல் முறையாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா சென்றார். அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 1352 ரன்கள் குவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் 28 வரை விளையாடிய அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை (116 ரன்கள்) அடித்தார். அடுத்து 2014-15 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது, அவர் நான்கு சதங்களை அடித்தார், அதில் இரண்டு அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளாசினார்.