இந்தியா – வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு வந்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள பொலிஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200க்கும் மேற்பட்டோரை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தரவுகளில், இதுவரை 167 சடலங்களின் சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 77 ஆண்கள், 67 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் உட்பட 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 166 சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 75 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.