இந்தியா – திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம்!
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெறக் காத்திருந்த ஆயிரக்கணக்கானோர் திடீரெனத் திறக்கப்பட்ட முக்கிய நுழைவாயிலை நோக்கி ஓடியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். புதன்கிழமை (ஜனவரி 8) இரவு நடந்த அச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்க்க உள்ளார்.பலியானவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்தை வியாழக்கிழமை (ஜனவரி 9) பார்வையிட்ட ஆந்திர மாநில அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான கோயில் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்,” என்று கோயில் அறக்கட்டளைத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கு கோயில் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவத்தால் தான் வருத்தமடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்ம் உறுதியளித்தார்.
திருப்பதியில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்ட இடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் 10ஆம் திகதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19ஆம் திகதி வரை பக்தர்கள் அதன் வழியே தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.
புதன்கிழமை (ஜனவரி 8) இரவு 8 மணிக்கு விஷ்ணு நிவாசம் அருகே இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. வரிசையில் இருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை வெளியேற்ற நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது. அதை அறியாத வரிசையில் நின்ற பக்தர்கள் பலரும் ஒரே நேரத்தில் நுழைவு வாயிலுக்குள் முயன்றதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் கூறியிருந்தாலும், கட்டுக்கடாங்காதக் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நாள்களில் திருப்பதியின் 2 – 3 லட்சம் வரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வழங்க முடிவு செய்து திருமலை திருப்பதி உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டிக்கெட் பெற புதன்கிழமையே மக்கள் வரிசையில் நின்றுள்ளனர்.