ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவையை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

வணிகம், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு வருகை தர விரும்பும் ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, காபூலில் உள்ள அதன் தூதரகத்திலிருந்து இந்தியா அதிகாரிகளை திரும்பப் பெற்று விசா சேவைகளை நிறுத்தியது.
இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விசா போர்ட்டலில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வணிகம், மாணவர், மருத்துவம், மருத்துவ உதவியாளர், நுழைவு மற்றும் ஐ.நா. தூதர் ஆகிய பிரிவுகளில் விசாக்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெயர், பிறந்த தேதி, தேசியம், காலாவதி தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் தேசிய அடையாள அட்டையை (தாஸ்கிரா) ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஒவ்வொரு வகை விசாவிற்கும் எதிரே குறிப்பிடப்பட்டுள்ளன. வணிக அட்டைகள், அழைப்பிதழ் கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும், தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.