இந்தியா – பாகிஸ்தான் மோதல் – துருக்கி பொருட்களைப் புறக்கணிக்கும் இந்திய வர்த்தகர்கள்

துருக்கியிலிருந்து வரும் பொருட்களை இந்தியாவில் உள்ள சிறிய மளிகைக் கடைகளும் பெரிய சில்லறை வர்த்தகர்களும் புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதலில் துருக்கி, பாகிஸ்தான் பக்கம் நின்றது இந்தியர்களைக் கோபப்படுத்தியது.
அதனால் இந்திய வர்த்தகர்கள் துருக்கியின் சாக்லெட், கோப்பி, துணி உள்ளிட்ட பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதியில் பயணிகள் மீது சென்ற மாதம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பதில் தாக்குதல்களை நடத்தியது. 4 நாட்களுக்கு இருநாடுகளும் பெரியளவில் மோதிக்கொண்டன. பின் சண்டை நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
அப்போது துருக்கி ஜனாதிபதி ரிசப் தாயிப் எர்துவான் பாகிஸ்தானுக்குத் துணை நிற்பதாகத் தெரிவித்தார்.
அனைத்திந்திய பொருள் விநியோகிப்பாளர்கள் சம்மேளனம் 13 மில்லியன் மளிகைக் கடைகளுக்கு பொருள்களை விநியோகம் செய்கிறது. துருக்கியிலிருந்து வரும் அனைத்துப் பொருள்களையும் காலவரம்பின்றி புறக்கணிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.
Flipkart, செல்வந்தர் முக்கேஷ் அம்பானியின் Reliance நிறுவன இணையப்பக்கங்களிலும் துருக்கியேவின் பொருட்ள்கள் அகற்றப்பட்டுள்ளன.