இந்தியா – விசாரணைக்குச் சென்ற இடத்தில் காவலர் மிதித்ததில் ஒரு மாதமே ஆன குழந்தை பலி

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதிக்குக் காவல்துறையினர் விசாரணைக்காகச் சென்றிருந்தனர். அப்போது, காவலர் ஒருவர் மிதித்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்வார் மாவட்டத்தில் நாக்வன் காவல்துறைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள வீடு ஒன்றில் இணைய மோசடி தொடர்பில் ஒருவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறை சென்றது.
அப்போது அங்திருந்த கட்டிலில் தாயின் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. காவலர் ஒருவர் அக்குழந்தையை மிதித்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதில் காயமடைந்த அக்குழந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
குழந்தை பலியானதைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் அதற்குக் காரணமான இரு காவலர்களைக் கைது செய்யக்கோரி, மாவட்டக் கண்காணிப்பாளர் வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயரதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.