இந்தியா – ஆறு நாள்களில் காணாமற்போன 334 பிள்ளைகளை மீட்ட ஒடிசா பொலிஸார்
காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஒடிசா காவல்துறையினர், கடந்த ஆறு நாள்களில் மட்டும் 306 பெண் பிள்ளைகள் உட்பட 334 சிறார்களை மீட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை புவனேஸ்வரில் உள்ள பெண்கள், பிள்ளைகளுக்கு எதிரான குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் காணாமற்போன சிறார்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
“ஆறு நாள்களில் ஒடிசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 334 பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர். பத்ரக் வட்டாரக் காவல்துறையினர் 65 குழந்தைகளை மீட்டனர். மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை ஆக அதிகம். சிறப்பாக செயல்பட்ட அவ்வட்டார அதிகாரிகளுக்குப் பாராட்டுக்கள்,” எனப் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு உயரதிகாரி எஸ் ஷைனி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.