இந்தியா- உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் தலைக்கவசத்தில் கேமராவுடன் வலம் வரும் நபர்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த சதீஷ் சௌகான், 30, என்பவர் அதிநவீன கேமரா படக்கருவி பொருத்தப்பட்ட தலைக்கவசத்துடன் காணப்படுகிறார். வீட்டில் இருந்தாலும் சரி, வேறெங்கும் வெளியே வாகனங்களில் சென்றாலும் சரி இந்தத் தலைக்கவசத்துடன்தான் வலம் வருகிறார்.
“எனக்கும் என் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் இடையே நெடு நாள்களாக நிலத்தகராறு இருந்து வருகிறது. இதன் காரணமாக எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நான் கேமரா பொருத்தப்பட்ட தலைக்கவசத்தை அணிந்து வருகிறேன்.
“எனது பயம் குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் கூறியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால், அவற்றை எல்லாம் அண்டை வீட்டுக்காரர்கள் நாசப்படுத்தி விட்டனர்.
“வேறு வழி தெரியாமல்தான் இதுபோன்ற தலைக்கவசத்துடன் சுற்றிக் கொண்டுள்ளேன். ஒருவேளை நான் உயிரிழந்தால் குற்றவாளிகளைக் கேமரா காட்டிக் கொடுத்துவிடும்.
“ஹெல்மெட் மேன்’ என்று என்னைப் பலரும் கிண்டல் செய்து அழைக்கின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இதுதான் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புக் கவசம்,” என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.