ஏஐ துறையில் உலகை வழிநடத்த இந்தியா தயாராகிறது
இந்திய செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு – உலகளாவிய தாக்கம்” என்ற உச்சி மாநாட்டை முன்னிட்டு, இந்திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில், அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மஹிந்திரா, ஜென்டீக் உள்ளிட்ட பல முன்னணி ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில் முனைவோரும் இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய சக்தி எனக் கூறினார்.
சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும்
அவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஏஐ உச்சி மாநாடு, தொழில்நுட்ப துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதை உலகிற்கு காட்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அவற்றை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தும் திறன் இந்தியாவில் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
உலகிற்கு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு மொடல்களை இந்தியா உருவாக்க வேண்டும் என்றும், “உலகுக்காக இந்தியாவில் தயாரித்தல்” என்ற கொள்கையை அது பிரதிபலிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி மேலும் வலியுறுத்தினார்.





