இந்தியா- அறக்கட்டளை என்ற போர்வையில் சிறுமிகளை வாங்கி அதிக விலைக்கு விற்ற கும்பல் கைது

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை குறைந்த விலைக்கு வாங்கி, மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் உள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, ஏழைப் பெண்களைக் கடத்தி, மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து காவலர் நிலையத்தில் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவலர்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தைச் சோதனை செய்து, காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, “பெண்களைக் கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குநரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.
சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாகக் காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இதுவரை 1,500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தார்