இந்தியா- பெண் மருத்துவர் படுகொலை : சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரி CBI மேல் முறையீடு
பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், கொடூர பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு, கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று மேல் முறையீடு செய்தது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுமீதான விசாரணையின்போது, இதே கோரிக்கையுடன் மாநில அரசும் மனு ஒன்றினைத் தக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வரும் ஜனவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி கோல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.