இந்தியா – சக வீரர்களைச் சுட்டுக் கொன்று விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பாதுகாப்புப் படை வீரர்

மணிப்பூரில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்னதாகத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில், சக வீரர்கள் இருவர் பலியாகினர்.மேலும், எட்டு வீரர்கள் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் லாம்சங் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள ஹவில்தார் சஞ்சய் குமார் என்பவர் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) இரவு 8 மணியளவில் தனது துப்பாக்கியால் சக வீரர்களைச் சுட்டார்.
இந்தச் சம்பவத்தில் ஓர் உதவி ஆய்வாளர் உள்பட இரண்டு வீரர்கள் பலியாகினர். மேலும், முகாமில் இருந்த எட்டு வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதே துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு சஞ்சய் குமார் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த வீரர்கள் அனைவரும் இம்பாலில் உள்ள மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.