இந்தியா – தாய்லாந்திலிருந்து 10 கோடி மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த கல்லுாரி மாணவர்கள் கைது
 
																																		தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவன், மாணவி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிக்கினர்.விசாரணைக்குப் பின்னர் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அண்மைக் காலமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கேரளாவிற்கு உயர் ரக போதைப் பொருளைக் கடத்தி வருவதாக திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிர மடைந்தது. பேங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருவனந்தபுரம் வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது 23 வயதான இளையர், 22 வயதான இளம் பெண்ணின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. இதையடுத்து அவர்களுடைய உடைமைகளைச் சோதித்தபோது, 10 கிலோ எடையுள்ள உயர் ரக கலப்பின கஞ்சா சிக்கியது.இதன் அனைத்துலகச் சந்தை மதிப்பு பத்து கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பில் கைதான முகம்மது ஷகித், சஹினா ஆகிய இருவரும் மலப்புரத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் யாருக்காக போதைப்பொருள் கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதன் பின்னணியில் அனைத்துலக அளவிலான கடத்தல் கும்பலுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
        



 
                         
                            
