கப்பல் விபத்தில் காணாமல் போன இலங்கையர்கள் – இந்தியாவின் உதவியுடன் தேடுதல் வேட்டை
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பலில் இருந்த 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
மூன்று இலங்கையர்களும் காணாமல் போன குழுவைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள குழுவினர் இந்தியர்கள் என்பதால், இந்தியாவின் உதவியுடன் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஓமன் தொடங்கியுள்ளது.
ஓமனின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது.
கொமொரோஸ் நாட்டின் கொடியின் கீழ் பயணித்த பிரஸ்டீஜ் ஃபால்கன் என்ற எரிபொருள் டேங்கர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
2017ல் தயாரிக்கப்பட்ட கப்பல் 117 மீட்டர் நீளம் கொண்டது.
துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
காணாமல் போனவர்களை தேடும் பணிக்காக இந்திய போர்க்கப்பலும், கண்காணிப்பு விமானமும் வழங்கப்பட்டுள்ளன.
கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், கப்பல் கவிழ்ந்ததாக கடல்சார் பாதுகாப்பு மையம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.