இந்தியா- 150 ஆண்டு பழமையான கிணற்றிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 8 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான கிணற்றுக்குள் அடுத்தடுத்து இறங்கிய எட்டுப் பேர் நச்சு வாயுவை சுவாசித்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
கங்கௌர் மாதா திருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காக கிராம மக்கள் கிணற்றைத் தயார் செய்து கொண்டிருந்தபோது வியாழக்கிழமை இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.காண்ட்வா மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
“கங்கௌர் மாதாவின் திருவிழாவை முன்னிட்டு, கிணற்றைச் சுத்தம் செய்வதற்காக சிலர் உள்ளே இறங்கினர். நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த கிணற்றுக்குள் நச்சு வாயு உருவானதால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. எட்டு பேர் கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டனர்.
“காவல்துறை, துணை ராணுவப் படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,” என்று காண்ட்வா மாவட்ட ஆட்சியர் ரிஷவ் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் மாநில அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.எட்டுப் பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
“கிணற்றைச் சுத்தம் செய்வதற்காக இறங்கிய ஒருவர் சேற்றில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் கிணற்றுக்குள் இறங்கிய மற்ற ஏழு பேரும் ஒருவர் பின் ஒருவராக சிக்கிக்கொண்டனர்,” என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“துயரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று மோகன் யாதவ் கூறினார்.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.