இந்தியா – சத்தீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 27 பேர் சுட்டு கொலை
சத்தீஸ்கர் காவல் துறையின் டிஆர்ஜி படை மற்றும் மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 1,000 வீரர்கள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய அண்மைக்காலமாக ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ட்ரோன் கண்காணிப்பின்போது சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்ட வனப்பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இந்த வனப்பகுதி ஒடிசா எல்லைக்கு அருகே அமைந்திருக்கிறது.இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் ஒடிசா காவல் துறையின் உதவி கோரப்பட்டது. ஒடிசா காவல் துறையை சேர்ந்த 3 சிறப்பு படைகள், சத்தீஸ்கர் காவல் துறையின் 2 சிறப்பு படைகள், சிஆர்பிஎப் பிரிவை சேர்ந்த 5 சிறப்பு படைகள் இணைந்து சத்தீஸ்கரின் கரியாபந்து வனப்பகுதியை கடந்த திங்கள்கிழமை சுற்றி வளைத்தன.
திங்கள்கிழமை பிற்பகலில் இருதரப்புக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமை இரவு முழுவதும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் சிஆர்பிஎப் படையை சேர்ந்த புதிய வீரர்கள் கரியாபந்து வனப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 27 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் நக்சல் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரெட்டி (60) என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
என்கவுன்ட்டர் குறித்து சத்தீஸ்கர் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது, கடந்த திங்கள்கிழமை முதல் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. முதலில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். தற்போது சுமார் 3 கி.மீ. சுற்றளவில் நக்சல் தீவிரவாதிகள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நடமாட்டம் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதால் எங்கும் தப்பியோட முடியாது. 12 மணி நேரத்துக்கும் மேலாக சண்டையில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் அனுப்பப்படுகின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றி வருகிறோம். இதுவரை 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 16 பேரின் சடலங்களை கைப்பற்றி உள்ளோம். சுமார் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து என்கவுன்ட்டர் நடைபெறுவதால் நக்சல் தீவிரவாதிகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். பாதுகாப்புப் படையில் ஒரு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு சத்தீஸ்கர் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.