இந்தியா – கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 11 பாஜக நிர்வாகிகள் நீக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக நிர்வாகிகள் 11 பேர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அக்கட்சி அவர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
காங்கிரஸ் – சிவசேனை (உத்தவ்) – தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தோல்வியடைந்தது. பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் சில இடங்களில் கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்குவது, தோ்தலில் கட்சிக்கு எதிராக செயல்படுவது போன்றவை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதன்படி அகோலா மாவட்டத்தில் 11 பாஜக நிா்வாகிகள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கையை பாஜக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.